வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

திருக்குறள் அதிகாரம் ஒழுக்கமுடைமை | Olukkam Udaimai Adhikaram Thirukkural

Updated On: March 27, 2025 3:18 PM
Follow Us:
Olukkam Udaimai Adhikaram Thirukkural
---Advertisement---
Advertisement

Thirukkural Olukkam Adhikaram in Tamil

ஒழுக்கம் என்பது மனிதன் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயமாகும். பிறருக்கு ஒழுக்கத்தை நாம் சொல்லிக்கொடுப்பதை விட தன்னிடம் எந்த அளவிற்கு ஒழுக்கமானது நிறைந்துள்ளது என்பதை முதலில் பார்க்க வேண்டும். திருவள்ளுவர் ஒழுக்கமுடைமை பற்றி குறள் மூலம் மனிதர்களுக்கு மிக சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். திருவள்ளுவர் இயற்றிய ஒவ்வொரு அதிகாரமும் மனித வாழ்க்கைக்கு மிகவும் பயன்படக்கூடிய விஷயமாக இருக்கிறது. சரி வாங்க இந்த பதிவில் ஒழுக்கமுடைமை திருக்குறள் அதிகாரத்தை பற்றி படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

திருக்குறள் அதிகாரம் ஒழுக்கமுடைமை PDF 

திருக்குறள் 4 அதிகாரம்

குறள் 131:

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

குறள் விளக்கம்:

ஒரு மனிதருக்கு ஒழுக்கம் என்பது எப்போதும் மேன்மையை தரக்கூடிய ஒன்று. அந்த ஒழுக்கம் தான் உயிரினும் மேலாக சான்றோரால் காக்கப்படுகிறது.

மு வரதராசன் உரை விளக்கம்: ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.

குறள் 132:

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

குறள் விளக்கம்:

வருந்தியேனும் ஒழுக்கத்தை போற்றி பாதுகாக்க வேண்டும். பலவற்றை ஆராய்ந்து கைக்கொண்டு தெளிந்தாலும் ஒழுக்கம் மட்டுமே உயிருக்கு துணையாக நிற்கும்.

மு வரதராசன் உரை விளக்கம்: ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்

குறள் 133:

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

குறள் விளக்கம்:

ஒழுக்கம் உடையவராக இருப்பதே உயர்ந்த குடி பிறப்பின் தன்மையாகும். ஒழுக்கம் கெடுதல் இழிந்த பிறப்பின் தன்மையாகிவிடும்.

மு வரதராசன் உரை விளக்கம்: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்

குறள் 134:

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

குறள் விளக்கம்:

கற்றதை மறந்ததும் மீண்டும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் பிறப்பால் வந்த உயர்வு அவன் ஒழுக்கம் குன்றினால் அனைத்தும் கெடும்.

மு வரதராசன் உரை விளக்கம்: கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்

குறள் 135:

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

குறள் விளக்கம்:

பொறாமை குணம் இருப்பவர்களிடம் ஆக்கம் இல்லாதது போன்று ஒழுக்கம் இல்லாதவன் வாழ்க்கையில் உயர்வும் இருக்காது.

மு வரதராசன் உரை விளக்கம்: பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.

மு. கருணாநிதி உரை விளக்கம்: பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.

குறள் 136:

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் பாடுபாக் கறிந்து.

குறள் விளக்கம்:

மனதில் அதிக வலிமை உடையவர் ஒழுக்கம் குன்றுதலால் குற்றம் நேரிடுதலை அறிந்து ஒழுக்கத்திலிருந்து எப்போதும் பிறழ மாட்டார்கள்.

மு வரதராசன் உரை விளக்கம்: ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.

குறள் 137:

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

குறள் விளக்கம்:

ஒழுக்க குணத்தால் எல்லோரும் மேன்மையை அடைவார்கள். ஆனால் ஒழுக்கத்தினை தவறினால் அடையக்கூடாது பெரும் பழியினை அடைவார்கள்.

மு வரதராசன் உரை விளக்கம்: ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.

குறள் 138:

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

குறள் விளக்கம்:

நல்ல ஒழுக்கமானது இன்பமான வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். தீய ஒழுக்கமானது எந்த காலத்திற்கும் துன்பத்தை மட்டுமே தரும்.

மு வரதராசன் உரை விளக்கம்: நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும் தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.

குறள் 139:

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

குறள் விளக்கம்:

கெட்ட சொற்களை தவறியும் தம் வாயினாற் சொல்லும் குற்றம் நல்ல ஒழுக்கம் உடையவர்களுக்கு ஒருபோதும் பொருந்தாத பண்பாகும்.

மு வரதராசன் உரை விளக்கம்: தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.

மு. கருணாநிதி உரை விளக்கம்: தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.

குறள் 140:

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலர் தார்.

குறள் விளக்கம்:

உலகத்தவரோடு பொருந்தி ஒழுகும் தன்மையை அறியாதவர் பல நூல்களை கற்று இருந்தாலும் அறிவில்லாதவர் போன்றுதான் இருப்பார்கள்.

மு வரதராசன் உரை விளக்கம்: உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.

மு. கருணாநிதி உரை விளக்கம்: உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.

திருக்குறள் அதிகாரம் 9

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now