செந்தமிழ் நாடெனும் போதினிலே பாடல் வரிகள்..!

Senthamil Nadenum Pothinile Song Lyrics in Tamil

செந்தமிழ் நாடெனும் போதினிலே Lyrics

தோழிகள் மற்றும் தோழர்களுக்கு பொதுநலம்.காம்-யின் வணக்கங்கள் இன்னும் சில நாட்களில் நமது இந்திய நாட்டின் 73-ஆம் ஆண்டு குடியரசு தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில். இந்தியாவில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, தேசப்பற்று பாடல்கள் பாடுவது என்று பலவகையான போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில் இந்த பதிவில் குடியரசு தின பாடல் வரிகளை பதிவு செய்துள்ளோம். அவற்றில் படித்து பயன்பெறுங்கள். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் நன்றி…

Senthamil Nadenum Pothinile Song Lyrics in Tamil

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் – இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி – என
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே – நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு – செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே – அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே – நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே – புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் – மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவக – மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி – அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் – நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

விண்ணை யிடிக்கும் தலையிமயம் – எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் – தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் – மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

குடியரசு தினம் பற்றிய சுவாரசியமான தகவல்
குடியரசு தின வாழ்த்துக்கள் 2022
குடியரசு தின வரலாறு
மூவர்ண கொடியின் சிறப்பு

 

மேலும் பலவகையான பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள்–> www.pothunalam.com