வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

திருக்குறள் அதிகாரம் 9 | Thirukkural Adhikaram 9

Updated On: March 25, 2025 3:02 PM
Follow Us:
Thirukkural Adhikaram 9
---Advertisement---
Advertisement

விருந்தோம்பல் அதிகாரம் திருக்குறள் 

இந்த உலகத்தில் பல விதமான மொழிகள் வழக்கத்தில் உள்ளது. அதில் தமிழ் மொழி தனித்துவம் கொண்டது. தமிழில் பல நூல்கள் உள்ளது, அதில் திருக்குறள் மிகவும் பெருமைக்குரிய நூல் என்றே சொல்லலாம். இந்த திருக்குறளில் உள்ள ஒவ்வொரு அதிகாரமும், பொருளும் அன்றைய காலத்தில் உள்ள மக்கள் முதல் இன்றைய காலத்தில் உள்ள மக்கள் வரை அனைவருக்கும் மிகவும் பயனுள்ள கருத்துக்களை எடுத்துரைக்கிறது. இத்தகைய சிறப்புகளை உடைய திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களையும், பொருளையும் தெரிந்து கொள்வோம் வாங்க.

விருந்தோம்பல் திருக்குறள் அதிகாரம்:

குறள்: 81

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

பொருள்:

இல்லத்தில் பொருட்களை சேர்த்தும், காத்தும் வாழ்வது வரும் விருந்தினரை பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆகும்.

மு. வரதராசன் உரை விளக்கம்: வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.’

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.

குறள்: 82

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

பொருள்:

விருந்தினரை வீட்டிற்கு வெளியே விட்டு விட்டு, தான் மட்டும் உண்பது சாகா மருந்தாக இருந்தாலும் அது நல்லதல்ல.

மு. வரதராசன் உரை விளக்கம்: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று.

மு. கருணாநிதி உரை விளக்கம்: விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.

குறள்: 83

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

பொருள்:

நாடி வந்த விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, எப்போதும் துன்பம் அடைவதில்லை.

மு. வரதராசன் உரை விளக்கம்: தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.

மு. கருணாநிதி உரை விளக்கம்: விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.

குறள்: 84

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

பொருள்:

புன்னகையுடனும், இனிய முகத்துடனும் விருந்தினரை உபசரிக்கும் வீட்டில் செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.

மு. வரதராசன் உரை விளக்கம்: நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.

குறள்: 85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

பொருள்:

விருந்தினரை போற்றி அவர்களுக்கு உணவளித்து, மீதம் இருக்கும் உணவை உண்டு வாழும் நபரின் நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.

மு. வரதராசன் உரை விளக்கம்: விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?

மு. கருணாநிதி உரை விளக்கம்: விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?

குறள்: 86

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.

பொருள்:

வந்த விருந்தினரை மனமகிழ்ந்து உபசரித்து வழி அனுப்பிய பின், எதிரே வரும் விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்பவரை வானில் உள்ள தேவர்கள் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.

மு. வரதராசன் உரை விளக்கம்: வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.

குறள்: 87

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

பொருள்:

விருந்தினரை கவனிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது, வரும் விருந்தினருக்கு ஏற்றவாறு நன்மை கிடைக்கும்.

மு. வரதராசன் உரை விளக்கம்: விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.

குறள்: 88

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

பொருள்:

விருந்தினரை உபசரித்து அதில் வரும் பயனை அடைய விரும்பாதவர்கள். செல்வத்தை சேர்த்து வைத்து அதை இழக்கும்போது நல்ல வாய்ப்பை இழந்து விட்டோமே என்று வருந்துவார்கள்.

மு. வரதராசன் உரை விளக்கம்: விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.

குறள்: 89

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

பொருள்:

விருந்தினரை முகமலர்ந்து உபசரிப்பதை விட வேறு பேரு எதுவும் இல்லை, அறிவில்லாதவர்களிடம் தான் விருந்தினரை உபசரிக்க கூடாது என்ற எண்ணம் இருக்கும்.

மு. வரதராசன் உரை விளக்கம்: செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.

குறள்: 90

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

பொருள்:

முகர்ந்தாலே வாடும் அனிச்ச மலர்போல், அதுபோல இன்முகம் காட்டி உபசரிக்காத விருந்து வீணாகிவிடும்.

மு. வரதராசன் உரை விளக்கம்: அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.

திருக்குறள் அதிகாரம்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement

Dharani

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now