புரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதங்கள் மற்றும் வழிபடும் முறை..!

Advertisement

புரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதங்கள் மற்றும் வழிபடும் முறை..! புரட்டாசி மாத சிறப்புகள்..! (Purattasi Saturday Pooja Recipes)

புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையில் ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு படைப்பது தளியல் ஆகும். வீடு வாசலை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்றி படைக்கும் இடத்தில் படையல் கோலம் போட வேண்டும். தளியலுக்கு தேவையான அக்கார அடிசில், எள்ளோதரை, புளி சாதம், மிளகு சாதம், தயிர் சாதம், தளியல் வடை, கொண்டை கடலை சுண்டலுடன் வாழைக்காய் பொரியல் முருங்கை கீரை பொரியல் ஆகிய நைவேத்யங்கள் தயார் செய்ய வேண்டும்.

குத்து விளக்கின் ஐந்து முகங்களையும் நெய் தீபம் ஏற்றி கோலத்தின் இருபுறமும் வைக்க வேண்டும். குத்து விளக்கிற்கு குங்குமம் வைத்து துளசி மாலை அணிய வேண்டும். மூன்று நுனி வாழை இலைகளை விளக்கிற்கு முன்புறம் போட்டு நைவேதயங்களை இலையில் பரிமார வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் துளசியை கலந்து வைக்கவும்.

தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை, பாக்கு, சூடம் விபூதி குங்குமம் இவைகளை தட்டில் வைத்து தூப தீப ஆராதனை செய்து பெருமாளை கோவிந்தா கோவிந்தா என்ற நாமத்துடன் புரட்டாசி சனிக்கிழமை ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வழிபடுவது நல்லது. சரி புரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதம் (purattasi saturday pooja recipes) என்னென்ன செய்து படைக்க வேண்டும். அதன் செய்முறை விளக்கத்தை பற்றி இப்போது நாம் இங்கு தெரிந்து கொள்வோமா…

புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்கான பிரசாதம்:

புரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதம்: 1 

அக்கார அடிசில் செய்முறை விளக்கம்:

தேவையான பொருட்கள்:-

  1. சிறுபருப்பு – 50 கிராம்
  2. பச்சரிசி – இரண்டு ஸ்பூன்
  3. வெல்லம் – ஒரு கையளவு
  4. நெய் – தேவையான அளவு
  5. முந்திரி திராட்சை – சிறிதளவு
  6. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய் – சிறிதளவு

அக்கார அடிசில் செய்முறை:

அடுப்பில் ஒரு குக்கரை வைத்து இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றவும், நெய் உருகியதும் சுத்தம் செய்து கழுவிய சிறுபருப்பை நெய்யுடன் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.

பின்பு இரண்டு ஸ்பூன் பச்சரிசியை சுத்தமாக கழுவிய பின்பு பருப்புடன் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும். பிறகு 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மூன்று விஷில் வரும் வரை வேகவைக்கவும்.

பிறகு குக்கரில் உள்ள பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து, திரும்பவும் அடுப்பில் வைத்து ஒரு கையளவு வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி விடவும். வெல்லம் நன்கு கரைந்த பின்பு அடுப்பை அனைத்து விடவும்.

பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி அதனுடன் முந்திரி திராட்சை மற்றும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தயார் செய்து வைத்துள்ள அக்கார அடிசில் சேர்த்து கிளறி விடவும். அவ்வளவு தான் அக்கார அடிசில் தயார்.

புரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதம்: 2

எள்ளோதரை செய்முறை விளக்கம்:

தேவையான பொருட்கள்:

  1. வடித்த சாதம் – கப்
  2. கறுப்பு எள் (அ) வெள்ளை எள் – 4 ஸ்பூன்
  3. உளுத்தம்பருப்பு – 4 ஸ்பூன்
  4. காய்ந்த மிளகாய் – 4
  5. பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
  6. கறிவேப்பிலை – சிறிதளவு
  7. எண்ணெய் – தேவையான அளவு
  8. உப்பு – தேவையான அளவு
  9. கடுகு – ஒரு ஸ்பூன்

எள்ளோதரை செய்முறை விளக்கம்:-

அடுப்பில் ஒரு வெறும் வாணலியை வைத்து அவற்றில் எள், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.

ஆறிய பின் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி ஒரு ஸ்பூன் கடுகு உளுத்தப்பருப்பு சேர்த்து பொரித்து கொள்ளவும்.

பின்பு ஒரு கப் வடித்த சாதம் மற்றும் அரைத்த பொடி ஆகியவற்றை சேர்த்துக் கிளறி இறக்கவும். அவ்வளவு தான் எள்ளோதரை தயார்.

திருப்பதி கோவில் பற்றி அறிந்திடாத சில ரகசியங்கள்..!

புரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதம்: 3

மிளகு சாதம் செய்முறை விளக்கம்:-

தேவையான பொருட்கள்:

  1. வடித்த சாதம் – ஒரு கப்
  2. மிளகு தூள் – ஒரு ஸ்பூன்
  3. சீரகம் – சிறிதளவு
  4. உப்பு – தேவையான அளவு
  5. எண்ணெய் – தேவையான அளவு
  6. முந்திரி – சிறிதளவு

மிளகு சாதம் செய்முறை விளக்கம்:

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும் ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் முந்திரியை வறுத்து கொள்ளவும்.

பின்பு அதனுடன் ஒரு கப் வடித்த சாதம், ஒரு ஸ்பூன் மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். அவ்வளவு தான் மிளகு சாதம் தயார்.

புரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதம்: 4

தயிர் சாதம் செய்முறை விளக்கம்:-

தேவையான பொருட்கள்:-

  1. வடித்த சாதம் – ஒரு கப்
  2. கடுகு – 1/4 ஸ்பூன்
  3. வெள்ளை உளுந்து – 1/4 ஸ்பூன்
  4. பெருங்காயத்தூள் – சிறிதளவு
  5. கருவேப்பிலை, கொத்தமல்லி பொடிதாக நறுக்கியது – சிறிதளவு
  6. எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
  7. உப்பு – தேவையான அளவு
  8. பச்சை மிளகாய் – 2 (பொடிதாக நறுக்கியது)
  9. தயிர் – 1/4 கப்

தயிர் சாதம் செய்முறை விளக்கம்:

அடுப்பில் ஒரு கடாய் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் நன்கு சூடேறியதும் கடுகு மற்றும் உளுந்து சேர்த்து பொரித்து கொள்ளவும்.

பின்பு பச்சைமிளகாய், பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் தூள் சேர்த்து வதக்கவும், பிறகு 1/4 தயிர் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

பின்பு வடித்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான தயிர் சாதம் தயார்.

புரட்டாசி சனிக்கிழமை பூஜை – பிரசாதம்: 5

தேங்காய் சாதம் செய்முறை விளக்கம்:-

தேவையான பொருட்கள்:-

  1. வடித்த சாதம் – ஒரு கப்
  2. தேங்காய் துருவல் – ஒரு கையளவு
  3. கடுகு – 1/4 ஸ்பூன்
  4. உளுந்து – 1/4 ஸ்பூன்
  5. பெருங்காயத்தூள் – சிறிதளவு
  6. வறுத்த வேர்க்கடலை – சிறிதளவு
  7. முந்திரி – சிறிதளவு
  8. காய்ந்த மிளகாய் – இரண்டு
  9. எண்ணெய் – தேவையான அளவு
  10. உப்பு – தேவையான அளவு

தேங்காய் சாதம் செய்முறை விளக்கம்:-

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியது காய்ந்த மிளகாய் கடுகு உளுத்தப்பருப்பு மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

பின்பு அதனுடன் முந்திரி மற்றும் வேர்க்கடலை சேர்த்து வறுத்து கொள்ளவும்.

பிறகு அதனுடன் சிறிதளவு பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறிய பின்பு, ஒரு கையளவு துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

தேங்காய் பொன்னிறமாக மாறிய பின்பு வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான தேங்காய் சாதம் தயார்.

இந்த ஐந்து வகை பிரசாதங்களை புரட்டாசி சனிக்கிழமை அன்று வீட்டில் செய்து பெருமாளுக்கு படைப்பார்கள்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement