எதிர்காலத்தில் கல்லாபெட்டி கலெக்‌ஷனில் ரோபோ வா …!

ரோபோ

இணையதள வர்த்தகத்தில் 5-வது மிகப்பெரிய நிறுவனமான அலிபாபா சீனாவில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை துவங்கியுள்ளது. இது குறிப்பாக ரீட்டெய்ல் சூப்பர் ஸ்டோர்களின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் ரோபோவே கல்லாபெட்டியில் கலெக்‌ஷன்களை பெற்றுக்கொள்ளுமாம். அதாவது ரோபோ கேஷியர், முக அடையாள பணம் செலுத்துதல் என்ற டெக்னாலஜியால் அசர வைக்கிறது.

ஸ்மார்ட்போன்:

மனதில் நினைப்பதை தானாகவே புரிந்துகொள்ளும் அம்சத்தை மட்டும்தான் இன்னும் ஸ்மார்ட்போனில் கண்டு பிடிக்கவில்லை.

இப்பொது ஸ்மார்ட்போன் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நபராகவே செயல்பட்டு வருகிறது.வசதிகளை அதிகமாக வழங்கும் ஸ்மார்ட்போன் ஒரு பக்கம் என்றால்.

போட்டி போட்டு கொண்டு டேட்டாக்களை வாரிவழங்கும் டெலிகாம் நிறுவனங்கள் மறுபக்கம் என்று மனிதனின் அனைத்து தேவைகளையும் அறிந்தும் புரிந்தும் சேவைகளை வழங்குகிறது ஸ்மார்ட்போன்.

இணைய வர்த்தகத்தின் சேவைகள்:

குண்டூசி முதல் இறுதி சடங்குகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இணைய வர்த்தக நிறுவனங்கள் கொண்டு வந்து விட்டன.

எந்த ஒரு தேவைக்கும் வெளியே செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஜாலியாக ஆன்லைனில் செய்து விட முடியும்.

அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளின் நிறுவனங்கள் இ-வர்த்தகத்தின் மூலம் மக்களின் மாதாந்திர அத்தியாவசியங்களை பூர்த்தி செய்பவையாக மாறிவருகின்றன.

வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற அவை செய்யும் பிரயத்தனங்கள் மட்டுமே அந்த நிறுவனத்தை நோக்கி மக்கள் படையெடுக்கக் காரணமாக அமையும்.

அலிபாபா செய்துள்ள புதிய முயற்சி:

சீனாவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான அலிபாபா உலகிலேயே 5-வது பெரிய இணையதள நிறுவனம். இணைய வர்த்தகம், ரீட்டெய்ல் ஸ்டோர், தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறக்கிறது இதன் வளர்ச்சி.

இந்நிலையில் இந்த நிறுவனம் சீனா முழுவதும் தனது ரீட்டெய்ல் ஸ்டோரான ’ஹமா’வை விரிவாக்கம் செய்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சீனாவின் 65 இடங்களில் ஹமா ஸ்டோர் தொடங்கப்பட்டுள்ளது.

மினி ஷாப்பிங் மால்:

ஷாங்காயில் தொடங்கப்பட்டுள்ள ஹமா ஸ்டோர் மினி ஷாப்பிங் மால் போல காணப்படுகிறது. மளிகைப் பொருட்களை நேரில் வாங்கும் இடம், ஆன்லைன் ஆர்டர்களை டெலிவரி செய்யும் விநியோகிஸ்த மையம், ரெஸ்டாரண்ட் உள்ளிட்டவை இதில் உள்ளது.

இங்கு பொருட்களை வாங்குவோருக்காக ஹமா பெயரிலேயே ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பு:

கடையில் வைத்துள்ள பொருட்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பார்கோடுகளை செயலியில் ஸ்கேன் செய்தால் அந்தப் பொருளின் விலை, சந்தை நிலவரத்திற்கு ஏற்ப லைவ் விலை, ரெசிபிகள், பொருள் பற்றிய வாடிக்கையாளர்களின் கருத்துகள் என அனைத்தும் அடுத்த நிமிஷம் ஸ்மார்ட் போன் திரையில் வந்துவிடும்.

வாடிக்கையாளர்கள் நேரவிரயத்தை குறைக்க நினைக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் அவர்கள் இதே பொருட்களை ஆர்டர் செய்து வீட்டிலேயே பெறும் வசதியையும் இந்த செயலி வழங்குகிறது.

ஹமா ஸ்டோர் இரண்டு விற்பனை மையங்களாக செயல்படுகிறது:

ஆன்லைனில் கொடுக்கும் ஆர்டர்களை ஊழியர்கள் பைகளில் நிரப்பி கன்வேயர் பெல்ட்டில் பொருத்திவிடுகின்றனர். அந்த பெல்ட் பொருட்களை எடுத்துச் சென்று டெலிவரி மையத்திடம் ஒப்படைக்கிறது.

ஊழியர்களின் வேகம் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியால் ஹமா ஸ்டோர்களைச் சுற்றி 3 கிலோமீட்டர் தொலைவில் இருப்பவர்களுக்கு 30 நிமிடத்தில் ஆர்டர் செய்த மளிகை சாமான்கள் கிடைத்துவிடும்.

ஆனால் ரோபோ தான் இங்கு கேஷியர்:

நேரில் வந்து பொருட்களை வாங்கி செல்பவர்களைவிட ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகம் என்பதால் அவர்களுக்கான கட்டண வசதிக்காக அலி பே என்ற ஆன்லைன் தளத்தையும் அலிபாபா வழங்குகிறது.

ஹமா ஸ்டோருக்கு வருவோரும் அலி பே மூலமே பணம் செலுத்தலாம். ஆனால் இங்கு என்ன வித்தியாசம் என்றால் காலம்காலமாக பின்பற்றப்படும் கல்லாபெட்டியில் உட்காரும் கேஷியர்களுக்கு பதிலாக ரோபோ இங்கு கேஷியர்கள்.

முகத்தை அடையாளமாகப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறைக்கு கடந்த ஓராண்டாக தீவிரம் காட்டி வருகிறது அலிபாபா நிறுவனம். சீன அரசு மற்றும் நிறுவனங்களுக்கு முக அடையாளம் தொடர்பான திட்டங்களை செயல்படுத்தி வரும் ஹாங்காங் மென்பொருள் நிறுவனமான சென்ஸ் டைமிற்கு அலிபாபா 600 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.

கடந்த ஆண்டில் அலிபாபா நிறுவனம் கேஎஃப்சியுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு முகத்தை அடையாளமாக வைத்து பணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்தது.

ரீட்டெய்ல் ஸ்டோருக்கு அடுத்தபடியாக ஹமாவில் கிடைக்கும் புதிய அனுபவம், இங்குள்ள ரெஸ்டாரண்டில் உணவை வாடிக்கையாளர்களின் மேஜைக்கு ரோபோக்கள் டெலிவரி செய்கின்றன.

வாடிக்கையாளர்கள் தங்களது டேபிளில் உள்ள QR பார்கோடை ஹமா செயலியில் ஸ்கேன் செய்தால் அதிலேயே மெனுகார்டு வரும் அதிலிருந்து விருப்ப உணவை தேர்வு செய்யலாம்.

மொத்தத்தில் ஷாங்காயில் திறக்கப்பட்டுள்ள ஹமா ஸ்டோர் ஹைடெக் டெக்னாலஜியைக் கொண்ட புதிய கண்டுபிடிப்புகளின் கூடாரம்.

ரீட்டெய்ல் மார்க்கெட்டுகளின் எதிர்காலம் இப்படித் தான் இருக்குமோ இந்த தொழில்நுட்பம் மேலும் பல ஸ்டோர்களுக்கு விரிவடைந்தால் தங்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சம் இப்போதே சீனாவில் உள்ள மளிகைக்கடை அண்ணாச்சிகளுக்கு வந்துவிட்டது..!

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.