பள்ளிவாசல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி? | Nombu Kanji Seivathu Eppadi?
Nombu Kanji Recipe in Tamil:- நண்பர்களுக்கு வணக்கம்.. இஸ்லாமிய மக்களின் புனித மாதமாக கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ஆரம்பமாகிவிட்ட நிலையில், இந்த சீசனில் தமிழகம் முழுவதிலும் உள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் ஒரு மாதத்துக்கு கஞ்சி தயார் செய்யப்படும். ’நோன்புக் கஞ்சி’ என்று அழைக்கப்படும் இந்த கஞ்சியை பள்ளிவாசல்களில் நோன்பு துறக்கும் இஸ்லாமியர்கள் உட்கொள்வதோடு, பொதுமக்கள் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ச்சியடைவார்கள். இந்த நோம்பு கஞ்சி மிகவும் சுவையாக இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியமானது. குறிப்பாக இந்த நோம்பு கஞ்சி சாப்பிடுவதினால் உடலின் செரிமான மண்டலம் நன்கு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கிறது. மேலும், நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து வாடிப் போய் இருக்கும் மக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இப்படிப்பட்ட அற்புத நோம்பு கஞ்சியை எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
நோன்பு கஞ்சி காய்ச்சும் முறை
பள்ளிவாசல் நோன்பு கஞ்சி செய்ய தேவைப்படும் பொருட்கள் – Nombu Kanji Ingredients in Tamil:
- பச்சை அரிசி – 1 கப்
- பாசி பருப்பு – 1/2 கப்
- கடலைப் பருப்பு – 1/2 கப்
- துவரம் பருப்பு – 1/2 கப்
- சின்ன வெங்காயம் – 8
- பட்டை – 1
- கிராம்பு – 4
- தக்காளி – 1
- இஞ்சி – சிறிதளவு
- பூண்டு – 10 பல்
- வெங்காயம் – 1 (மீடியம் அளவு)
- கேரட் – 1 (சின்னதாய் நறுக்கியது)
- கொத்தமல்லி, புதினா, கருவேப்பில்லை – தேவைக்கேற்ப
- பச்சை மிளகாய் – 3
- கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- நெய் – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
நோன்பு கஞ்சி செய்முறை – Nombu Kanji Seivathu Eppadi?:
ஸ்டேப்: 1
முதலில் அரிசி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
ஸ்டேப்: 2
ஒரு கடாயில் பாசிப்பருப்பை நன்கு வறுக்க வேண்டும். பிறகு, ப்ரஷர் குக்கரில் பச்சை அரிசி, வறுத்த பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, நறுக்கிய இஞ்சி, 10 பல் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா, கேரட் ஆகிய அனைத்தையும் சேர்த்து 8 கப் தண்ணீர் விட்டு 4 முதல் 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
ஸ்டேப்: 3
பின்னர், அடுப்பு தீயை லேசாக வைத்து இன்னொரு 5 விசில் வரும்வரைக் காத்திருக்கவும். தேவைக்கேற்ப, கஞ்சி பதமாக வரும்வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவிடுங்கள்.
ஸ்டேப்: 4
பிறகு, தேங்காய் பால் சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடம் கொதிவந்த பின் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
ஸ்டேப்: 5
பின்னர் ஒரு கடையில் சிறிது எண்ணெய் விட்டு, பட்டை , கிராம்பு போட்டு கொத்தமல்லி, புதினா தேவைக்கேற்ப சேர்த்து தாளிக்க வேண்டும். இந்த தாளிப்பை தயார் நிலையிலுள்ள கஞ்சியில் சேர்த்து ஒருமுறை கிளறினால், கம கமனு ருசியான நோன்பு கஞ்சி தயார்.
சமையல் குறிப்பு: தேவைப்பட்டால் இத்துடன் மட்டன் எலும்புக் கறியையும் சேர்த்து வதக்கி கொள்ளலாம்.. கஞ்சி இன்னும் ருசியாக இருக்கும்..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |