வல்லாரை கீரை சமைப்பது எப்படி.? | Vallarai Keerai Recipe in Tamil
Vallarai Keerai Recipe in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் வல்லாரை கீரை வைத்து பல வெரைட்டியான சமையல் டிப்ஸ்தான் பார்க்கப்போகிறோம். வல்லாரை கீரை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என்பதுதான். வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் தாது உப்பு அதிகமாக நிறைந்துள்ளது. காலையில் எழுந்தவுடன் தினமும் வல்லாரை கீரையினை பச்சையாக மென்று சாப்பிட்டுவர மூளை பகுதியில் இருக்கும் நரம்புகள் பலம் பெரும், அதுமட்டுமல்லாமல் ஞாபக சக்தியும் அதிகரிக்க செய்யும். சரி இப்போது வல்லாரை கீரை வைத்து என்னென்ன ரெசிப்பீஸ் (vallarai keerai recipe) செய்யலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுவோம்..!
![]() |
வல்லாரை கீரை ரெசிபி:
Vallarai Keerai Kuzhambu Recipe / வல்லாரைக் கீரை சாம்பார் செய்வது எப்படி?
தேவையான பொருள்: சின்ன வெங்காயம் (10), பூண்டு (6 பல்), வல்லாரை கீரை நறுக்கியது (3 கப்), தண்ணீர் – தேவையான அளவு, புளிச்சாறு – 3 டேபிள் ஸ்பூன், மல்லித்தூள் – 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சர்க்கரை – 1 டீஸ்பூன். வேக வைக்க: துவரம் பருப்பு – 1/2 கப், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன். தாளிக்க: எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு மற்றும் சீரகம் – 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன், வரமிளகாய் – 1.
செய்முறை:
- வல்லாரை கீரை சாம்பார் செய்வதற்கு முதலில் குக்கரில் துவரம் பருப்பை போட்டு, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்த்து தண்ணீர் ஊற்றி அடுப்பில் 2-3 விசில் விட்டு அதன்பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
- இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளதை சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.
- கடாயில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 1 நிமிடம் வரை நன்கு வதக்கி கொள்ளவும்.
- அடுத்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வல்லாரை கீரையினை சேர்த்து வதக்கிய பிறகு தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும்.
- அடுத்ததாக அவற்றில் மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரைத்து வைத்துள்ள புளி சாறினை சேர்த்து நன்கு கொதிக்கவைத்து, அதன் பிறகு குக்கரில் உள்ள பருப்பினை நன்றாக மசித்து சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி, 5-8 நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கினால் டேஸ்டான வல்லாரை கீரை சாம்பார் தயார்.
Vallarai Keerai Dosai / வல்லாரை கீரை தோசை செய்வது எப்படி?
தேவையான பொருள்: பொடியாக நறுக்கிய வல்லாரை கீரை – 1 கப், பச்சைமிளகாய் – 1, தோசை மாவு – 1 கப், சீரகம் – 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
- பொடியாக நறுக்கி வைத்துள்ள வல்லாரை கீரையுடன் பச்சை மிளகாய், சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
- தோசை மாவில் ஜாரில் அரைத்து வைத்துள்ள கீரையை சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
- இப்போது இந்த மாவினை தோசையாக ஊற்றி எண்ணெய் ஊற்றி எடுத்தால் சுவையான வல்லாரை கீரை தோசை ரெடி.
Vallarai keerai Thuvaiyal / வல்லாரை துவையல் செய்வது எப்படி?
தேவையான பொருள்: வல்லாரை கீரை (2 கட்டு), காய்ந்த மிளகாய் (10), கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி, மிளகு – ஒரு தேக்கரண்டி, பூண்டு – 4 பல், தேங்காய் – ஒரு மூடி, புளி – சிறிதளவு, உப்பு & எண்ணெய் – தேவையான அளவு.
vallarai keerai thuvaiyal – செய்முறை:
- முதலில் வல்லாரை துவையல் செய்வதற்கு வல்லாரை கீரையினை நன்றாக அலசி அதன் நீரினை வடிக்கட்டி கொள்ளவும்.
- பிறகு தேங்காயை துருவி தனியாக எடுத்துக்கொள்ளவும். சிறிதளவு புளியை கரைத்து எடுத்துக்கவும்.
- இப்போது கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக பொன்னிறம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.
- அடுத்து காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டினை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
- அதனுடன் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து இப்போது வதக்கவும்.
- கடைசியாக வல்லாரைக் கீரையை பச்சை நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.
- இப்போது வறுத்த அனைத்தையும் நன்கு ஆற வைத்து கரைத்த புளி, தேவையான அளவு உப்பு, தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
- டேஸ்டான வல்லாரை துவையல் தயார். இந்த வல்லாரை துவையலை சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Vallarai Keerai Poriyal/ வல்லாரை கீரை பொரியல் செய்வது எப்படி?
தேவையான பொருள்: வல்லாரை கீரை – 1 கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 3, பூண்டு – 5 பல், பெருங்காயம் – 1/2 டீஸ்பூன், தேங்காய் துருவல் – 1/2 கப், எண்ணெய் – 1 மேஜை கரண்டி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- vallarai keerai poriyal in tamil: வல்லாரை கீரை பொரியல் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் போட்டு தாளித்து அதன் பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி அதனுடன் பெருங்காயத்தையும் சேர்த்து நறுக்கி வைத்துள்ள கீரையினை கடாயில் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
- வதக்கிய பிறகு தண்ணீர் சிறிதளவு சேர்த்து மூடி வேகவைக்கவும். கீரை நன்றாக வெந்த பிறகு துருவி வைத்துள்ள தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். கீரையானது நன்றாக வெந்த பிறகு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கிளற வேண்டும். சுவையான வல்லாரை கீரை பொரியல் ரெடி.
Vallarai Keerai Chutney/ வல்லாரை கீரை சட்னி செய்வது எப்படி?
தேவையான பொருள்: வல்லாரை கீரை அரைக்கட்டு, தக்காளி மற்றும் வெங்காயம் (தலா 1), இஞ்சி – சிறிய துண்டு, தேங்காய் துருவல் – 1/4 கப், பச்சை மிளகாய் – 5, கடுகு, உளுத்தம்பருப்பு (தலா 1/4 டீஸ்பூன்), பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- வல்லாரை சட்னி செய்வதற்கு இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அடுத்து வெங்காயம் மற்றும்`தக்காளியை சிறியதாக நறுக்கி தனியாக வைத்துக்கொள்ளவும்.
- இப்போது கடாயில் 2 டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பிறகு வல்லாரைக்கீரை, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் போன்ற எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
- வதக்கிய பிறகு கடாயில் இருந்து கீழே இறக்கிய பிறகு ஆறவைத்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
- கடைசியாக மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, அரைத்துவைத்துள்ள கீரையில் சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ளவும். அவ்ளோதாங்க சூப்பரான வல்லாரை சட்னி தயாராகிவிட்டது.
Vallarai Keerai Soup Recipe/ வல்லாரை கீரை சூப் செய்வது எப்படி?
தேவையான பொருள்: வல்லாரை கீரை – 1 கப், பாசிப்பருப்பு – 1 டீஸ்பூன், பூண்டு – 4 பல், சிறிய வெங்காயம் – 10, மிளகு மற்றும் சீரகம் – சிறிது, வெண்ணெய் – 2 டீஸ்பூன், பட்டை மற்றும் இலவங்கம் – 1, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- vallarai keerai soup: 1 கப் வல்லாரை கீரை மற்றும் வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கொள்ளவும். அடுத்ததாக மிளகு மற்றும் சீரகத்தை இடித்து வைத்துக்கொள்ளவும்.
- குக்கரில் 1 ஸ்பூன் வெண்ணை சேர்த்து பட்டை மற்றும் இலவங்கம் சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பூண்டை போட்டு வதக்கவும்.
- கடாயில் வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு பாசிப்பருப்பு, கீரை சேர்த்து சிறிது வதக்கிய பின் 2 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- குக்கர் ஆறியதும் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டி கொள்ளவும். இப்போது வடிகட்டிய சூப்பினை மீண்டும் அடுப்பில் வைத்து உப்பு, மிளகு, சீரகம் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.
- டேஸ்டான வல்லாரை கீரை சூப் ரெடியாகிவிட்டது. இந்த வல்லாரை சூப்பை சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தயங்காமல் குடிக்கலாம்.
மாடித்தோட்டத்தில் வல்லாரை கீரை வளர்ப்பது எப்படி.?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |