உவமை அணி விளக்கம் | Uvamai Ani Vilakkam

Advertisement

உவமை அணி என்றால் என்ன விளக்குக..!

உவமையணி என்பது ஒரு புலவர் தான் பிறருக்குக் கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது. தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது.

சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ அல்லது பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு, தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபு படுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமைப் புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.

12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் என்னும் இலக்கண நூல் உவமை அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:

“பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை”

என்ற நூற்பா விளக்குகிறது. தண்டியலங்காரம் குறிப்பிடும் பொருளணிகள் 35 இல் தலைமை அணியாக உவமை அணி அமைவதாலும் இந்த அணியிலிருந்தே பிற அணிகள் தோன்றுவதாலும் இந்த அணியைத் தாய் அணி என்றும் அழைப்பர்.

திருக்குறளில் உவமை அணி:

எடுத்துக்காட்டு:

“வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு நின்றான் இரவு”

விளக்கம்:

செ‌‌ங்கோ‌ல் உடைய அரச‌ன் ஒருவ‌ன் த‌ன் அ‌திகார‌த்‌தினைப் பய‌‌ன்படு‌த்‌தி வ‌ரி ‌எ‌ன்ற பெய‌ரி‌ல் ம‌க்க‌ளிட‌ம் பண‌ம் வசூ‌லி‌ப்பது, வே‌ல் முத‌லிய ஆயுத‌ங்களைக் கொ‌ண்ட ஒரு வ‌ழி‌ப்ப‌றி செ‌ய்வத‌ற்குச் சம‌ம் ஆகு‌ம்.

  • உவமான‌ம் – வேலொடு நின்றான் இடுஎன்றது.
  • உவமேய‌ம் – கோலொடு நின்றான் இரவு.
  • உவம உருபு – போலும்

உவமை அணி விளக்கம்

உவமை அணியின் இலக்கணத்தைச் சற்று விரிவாகக்காண்போம். உவமை அணியில் நான்கு உறுப்புகள் இருப்பதைக்காணலாம். அவை,

1) உவமை அல்லது உவமானம்
2) பொருள் அல்லது உவமேயம்
3) ஒத்த பண்பு
4) உவமை உருபு
ஆகியன.

உவமானம், உவமேயம்:

புலவர் விளக்கிக் கூறக் கருதும் பொருள், ‘பொருள்’ அல்லது ‘உவமேயம்’ எனப்படும். அப்பொருளை விளக்கவோ அழகுபடுத்தவோ அவர் இணைத்து கூறும் மற்றொரு பொருள் ‘உவமை’ அல்லது ‘உவமானம்’ எனப்படும்.

எடுத்துக்காட்டு:

தாமரை போன்ற முகம்

இங்குப் புலவர் விளக்கக் கருதிய பொருள் முகம். ஆகவே ‘முகம்’ உவமேயம். முகத்தை விளக்குவதற்காக அதனோடு அவர் இணைத்து கூறும் பொருள் ‘தாமரை’ ஆகவே தாமரை உவமானம்.

ஒத்த பண்பு:

உவமேயத்துக்கும் உவமானத்துக்கும் பொதுவாக உள்ள இயல்பைப் புலவர் சுட்டிக் காட்டியிருப்பார். இதுவே ‘ஒத்த பண்பு’ எனப்படும்.

எடுத்துக்காட்டு:

பவளம் போலும் செவ்வாய்

வாய்க்கும் பவளத்துக்கும் ஒத்த தன்மையாகிய ‘செம்மை’ (செம்மை-வாய்) இங்குச் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதைப்பாருங்கள்.

உவமை உருபு:

உவமானத்தையும் உவமேயத்தையும் இணைக்கும் போல, புரைய, ஒப்ப, மான போன்ற இவை உவமை உருபுகள் எனப்படும்.பொருளொடு பொருள் ஒப்புமைப்படுத்திக் கூறும் முறை.

  1. ஒரு பொருளொடு ஒரு பொருளும்
  2. ஒரு பொருளொடு பல பொருளும்
  3. பல பொருளொடு பல பொருளும்
  4. பல பொருளொடு ஒரு பொருளும்
    என நான்கு வகையாகப் பொருள்கள் இயைத்து (ஒப்புமைப்படுத்தி) கூறப்படும்.

ஒரு பொருளொடு ஒரு பொருள்

எடுத்துக்காட்டு:

செவ்வான் அன்ன மேனி

இங்கு ‘வானம்’ என்ற ஒரு பொருள் ‘மேனி’ என்ற ஒரு பொருளுக்கு உவமை ஆயிற்று.

ஒரு பொருளொடு பல பொருள்:

எடுத்துக்காட்டு:

அவ்வான்
இலங்கு பிறை அன்ன விளங்கு வால் வை எயிறு

இங்குப் ‘பிறைச்சந்திரன்’ என்ற ஒரு பொருள் ‘பற்கள்’ (எயிறு) என்ற பல பொருளுக்கு உவமை ஆயிற்று.

பல பொருளொடு பல பொருள்

எடுத்துக்காட்டு:

சுறவு இனத்து அன்ன வாேளார் மொய்ப்ப

இங்குச் ‘சுறா மீன் கூட்டம்’ என்ற பல பொருள் தொகுதி, ‘வாள் ஏந்திய வீரர் குழாம்’ என்ற பல பொருள்தொகுதிக்கு உவமை ஆயிற்று.

பல பொருளொடு ஒரு பொருள்:

எடுத்துக்காட்டு:

பெரும்பெயர்க் கரிகாலன் முன்னிலைச் செல்லாப்
பீடு இல் மன்னர் போல
ஓடுவை மன்னா? வாடை நீ எமக்கே?
(பீடு-பெருமை; ஓடுவை-ஓடுவாய்)

இங்கு, கரிகாலனை எதிர்த்து நிற்க மாட்டாமல் தோற்று ஓடிய பகை மன்னர்கள் பலர் தலைவன் வந்தவுடன் தலைவிக்கு முன் செயலற்று ஓடப் போகின்ற வாடையாகிய ஒரு பொருளுக்கு உவமை ஆயினர்.

மூவகை ஒப்புமைகள்

‘பண்பு, தொழில், பயன்’ என்னும் மூன்று ஒப்புமைத்தன்மை காரணமாக உவமை அணி தோன்றும் என முன்பு கண்டோம். இங்கு இவற்றை விளக்கமாகக் காணலாம்.

பண்பு உவமை:

ஒரு பொருளின் வடிவம், நிறம், சுவை, அளவு ஆகியவை அப்பொருளின் ‘பண்பு’ எனப்படும். இப்பண்புகள் காரணமாக அமையும் உவமை பண்பு உவமை ஆகும்.

எடுத்துக்காட்டு:

பவளத்தன்ன மேனி (பவளம் போன்ற உடல்)
வேய் புரை பணைத்தோள்

(வேய்-மூங்கில், மூங்கில் போன்ற தோள்)

பால் போலும் இன்சொல்

(பால் போன்ற இனிய சொல)

இங்குக் காட்டிய சான்றுகளில் முறையே பவளத்தின் நிறம் மேனிக்கும், மூங்கிலின் வடிவம் தோளுக்கும், பாலின்சுவை சொல்லுக்கும், உவமைகளாயின. இவ்வாறு பண்பு ஒப்புமை காரணமாக உவமை அமைந்தமையால் இவை பண்பு உவமை ஆகும்.

தொழில் உவமை:

ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாக அமையும் உவமை தொழில் உவமை எனப்படும்.

எடுத்துக்காட்டு:

அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்
திருமா வளவன்

(அரிமா-சிங்கம்: அணங்கு-துன்பம்: துப்பு-வலிமை)

சிங்கத்தைப் போன்று பகைவருக்குத் துன்பம் தரும் வலிமையினை உடைய திருமாவளவன் என்பது இவ்வடிகளின் பொருள். துன்பம் தருதல் என்ற தொழில் ஒப்புமை காரணமாக இது தொழில் உவமை ஆயிற்று.

அணி இலக்கணம்

பயன் உவமை:

ஒரு பொருளால் கிடைக்கும் பயன் காரணமாக அமையும் உவமை பயன் உவமை எனப்படும்.

எடுத்துக்காட்டு:

மாரி அன்ன வண்கைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே

(வண்கை-கொடைத்தன்மை, காணிய-காண, சென்மே-செல்லுக)

மழையை ஒத்த கொடைத் தன்மையை உடைய ஆய் வள்ளலைக் காண்பதற்குச் செல்வாயாக என்பது இவ்வடிகளின் பொருள். மாரியால் விளையும் பயனும் வள்ளலின் கொடையால் விளையும் பயனும் ஒத்தலின் இது பயன் உவமை ஆயிற்று.

உவமை அணி வகைகள் – Uvamai Ani Vilakkam:

உவமையணி மொத்தம் 24 வகைப்படும். அவையாவன என்பதை இங்கு கீழ் பார்க்கலாம்.

1. விரி உவமையணி
2. தொகை உவமையணி
3. இதரவிதர உவமையணி
4. சமுச்சய உவமையணி
5. உண்மை உவமையணி
6. மறுபொருள் உவமையணி
7. புகழ் உவமையணி
8. நிந்தை உவமையணி
9. நியம உவமையணி
10.அநியம உவமையணி
11.ஐய உவமையணி
12.தெரிதருதேற்ற உவமையணி
13.இன்சொல் உவமையணி
14.விபரீத உவமையணி
15.இயம்புதல் வேட்கை உவமையணி
16.பலபொருள் உவமையணி
17.விகார உவமையணி
18.மோக உவமையணி
19.அபூத உவமையணி
20.பலவயிற்போலி உவமையணி
21.ஒருவயிற்போலி உவமையணி
22.கூடா உவமையணி
23.பொதுநீங்குவமையணி
24.மாலையுவமையணி

தொடர்புடைய பதிவுகள் – லிங்கை கிளிக் செய்து படித்து பெறுங்கள்
இலக்கணம் என்றால் என்ன?
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
வினா எத்தனை வகைப்படும்?
புணர்ச்சி விதிகள் என்றால் என்ன?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement