கடவுள் வாழ்த்து திருக்குறள் | Thirukkural Kadavul Vazhthu

Thirukkural Kadavul VazhthuThirukkural Kadavul Vazhthu

திருக்குறள் கடவுள் வாழ்த்து குறள் விளக்கம் – Thirukkural Kadavul Vazhthu

உலக பொதுமறை நூலாக சிறந்து விளங்குவது திருக்குறள். திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன.. திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர். திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கிமு 31. இந்த திருக்குறளில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளது என்று தெரியுமா? திருக்குறளில் மொத்தம் 42,194 உள்ளன. திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே ஒரு உயிரெழுத்து எது? அப்படினா ஒள என்ற உயிரெழுத்துக்கள் தான் திருக்குறளில் பயன்படுத்தாத உயிரெழுத்து ஆகும். இது போன்று திருக்குறள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இருக்கிறது. திருக்குறள் பற்றிய அரிய தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் (திருக்குறள் பற்றிய வினா விடை). சரி இந்த பதிவில் அதிகாரம் 1 அதாவது கடவுள் வாழ்த்து திருக்குறள் மற்றும் அதன் விளக்கங்களை பற்றி படித்தறியலாம் வாங்க.

திருக்குறள் கடவுள் வாழ்த்து:

குறள்: 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

குறள் விளக்கம்:

எழுத்துகளெல்லாம் ‘அ’ எழுத்தைத் தமக்கு முதலெழுத்தாகக் கொண்டுள்ளன. அதுபோல் உலகத்து உயிர்கள் கடவுளைத் தமக்கு முதலாகக் கொண்டுள்ளன.


குறள்: 2

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

குறள் விளக்கம்:

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஒரு பயனும் இல்லை.


குறள்: 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

குறள் விளக்கம்:

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வர்.


குறள்: 4

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

குறள் விளக்கம்:

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை நினைப்பவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.


குறள்: 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

குறள் விளக்கம்:

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும் வந்து சேர்வதில்லை.


குறள்: 6

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

குறள் விளக்கம்:

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப்பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழிக்க நெறியில் நின்றவர், நிலைபெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.


குறள்: 7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

குறள் விளக்கம்:

தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது.


குறள்: 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

குறள் விளக்கம்:

அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாகிய கடலை நீந்திக் கடப்பது கடினம்.


குறள்: 9

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

குறள் விளக்கம்:

கேட்காத செவி; பார்க்காத கண் முதலியன போல் எண்குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவையாகும்.


குறள்: 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

குறள் விளக்கம்:

கடவுளின் திருவடிகளை அடைந்தவர், பிறவியாகிய பெரிய கடலை கடப்பார், அடையாதவர் அதனைக் கடக்கமாட்டார்.


 

தொடர்புடைய பதிவு:
திருக்குறள் பற்றிய சிறப்பு கட்டுரை
திருக்குறள் சிறப்புகள்
10 எளிமையான திருக்குறள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Today Useful Information in tamil