எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகங்கள் – Aids Vilipunarvu Katturai in Tamil..!
நோய் இல்லாத வாழ்க்கையை தான் அனைவருமே விரும்புவார்கள். நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த சமூகத்தை சற்று உற்றுப்பார்த்து நோக்கினால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நோய்கள் மனித சமூகத்திற்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்துள்ளது. அம்மை, காலரா, பிளேக், தொழுநோய் என பட்டியலிடலாம். அந்த வரிசையில்தான் எச்.ஐ.வி /எய்ட்ஸ் மனித சமூகத்திற்கு அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் உள்ளது. சரி இந்த பதிவில் எய்ட்சு நோய் பரவலைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த, நோய் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கட்டுரையை (hiv/aids awareness essay) பார்ப்போம் வாங்க.
எய்ட்ஸ் விழிப்புணர்வு கட்டுரை:
- முன்னுரை
- எய்ட்ஸ் என்பதன் அர்த்தம்
- எய்ட்ஸ் நோய் ஏற்படக் காரணங்கள்
- எய்ட்ஸ் நோய் அறிகுறி
- எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை:
ஒருவர் நோய் இல்லாமல் வாழ்கின்ற போதுதான் மனிதனே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கின்றான். அந்த வகையில் ஒருவருக்கு சிறிய நோயாக இருந்தாலும் சரி, பெரிய நோயாக இருந்தாலும் சரி பொதுவாக அந்த நோய் பற்றிய விழிப்புணர்வு அவசியமாகும். அந்த வகையில் எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்க அல்லது கட்டுப்படுத்த இது பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். எய்ட்ஸ் நோயானது ஓர் உயிர்க்கொல்லி நோயாகும். இதனைக் குணப்படுத்த சிகிச்சை கிடையாது. இந்நோய் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
எய்ட்ஸ் என்பதன் அர்த்தம்:
AIDS எனும் ஆங்கிலச் சொல்லில் A-Acquired என்பது ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவர் பெற்றுக் கொள்வதைக் குறிக்கின்றது. I-Immune என்பது உடல் எதிர்ப்பு சக்தி என்றும். D-Deficiency என்பது குறைத்து விடுதல் என்றும். S-Syndrome என்பது பல நோய்களின் கூட்டுத் தொகுப்பு என்றும் பொருள்படுகின்றது.
எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு:
இந்த எய்ட்ஸ் நோயினை முதல் முதலில் 1981-ஆம் ஆண்டு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பரவலாக இந்த நோய் உலகின் பல இடங்களில் பரவி வருகிறது. 1986-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோய் இருப்பவர்கள் கண்டறியப்பட்டனர். இன்று இந்தியா முழுவதிலும் பல லட்சம் பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எய்ட்ஸ் நோய் ஏற்பட காரணங்கள் என்ன?
HIV என்று சொல்லப்படும் கிருமி ஒருவரது உடலில் புகுந்துவிட்டால் இயல்பாக நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக அழித்துவிடும். 80 சதவீதம் எயிட்ஸ் நோய்க்குக் காரணமாக அமைவது பாதுகாப்பற்ற உடலுறவு ஆகும்.
மேலும் போதை பொருட்களை பயன்படுத்துகையில் சுத்தம் செய்யப்படாத ஊசியை ஒருவருக்கொருவர் செலுத்திக் கொள்ளுவது போன்ற செயல்களினால் இரத்தம் மூலம் பரவிக்கொள்கின்றது. பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுகின்றது.
எய்ட்ஸ் நோய் அறிகுறி:
ஆரம்ப நிலையில் அறிகுறிகள் தென்படுவதில்லை. இவ்வைரஸானது 3 மற்றும் 6 மாதங்களின் பின்பே அறிகுறிகள் தென்படும். உடல் எடையானது மிக வேகமாக குறையும். ஒரு மாதத்திற்கும் மேலாகக் காய்ச்சல், இருமல், வயிற்றுப் போக்கு, உடல் அரிப்புடன் கூடிய தோல் வியாதி ஆகியன ஏற்படும்.
எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் வழிமுறைகள்
எய்ட்ஸ் நோயை தடுக்க சிறந்த வழி பாதுகாப்பான நடத்தையாகும். ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற சித்தாந்தத்தில் வாழ்வது சிறப்பாகும். தகாத உடலுறவு கொள்வதை தவிர்ப்பது சிறப்பானதாகும்.
தொற்று நீக்கம் செய்யப்பட்ட ஊசி மற்றும் ஊசிக் குழல்களைப் பயன்படுத்தல் வேண்டும். இரத்ததானம் பெறுகின்ற போது எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்ட ரத்தத்தைத் தானமாகப் பெற வேண்டும்.
HIV இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் மருத்துவ அறிவுரையைப் பின்பற்றி குழந்தைகளுக்கு இத்தொற்றுப் பரவாமல் இருக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுப் போட்டிகளைத் தவறாது நடத்த வேண்டும்.
முடிவுரை:
எய்ட்ஸ் நோயாளிகள் சமூகத்தின் பார்வையில் பொதுவாக வேண்டப்படாதவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். இது தவறான செயலாகும். அவர்களும் மனிதர்களே என்பதை உணர்ந்து அவர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும்.
எல்லோரையும் சமமாக நடத்த வேண்டியது அடிப்படை உரிமையாகும். தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது அவசியமானதாகும். எனவே நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்த வாழ்வை வாழ்வதே சாலச் சிறந்ததாகும்.
டெங்கு விழிப்புணர்வு பற்றிய கட்டுரை |
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |