பண்டைய கால இந்திய வரலாறு | Pandaiya Kaala India Varalaru

Pamdaiya Kaala India Varalaru

பண்டைய கால இந்திய வரலாறு பற்றிய சிறு குறிப்புகள்

Pandaiya Kaala India Varalaru:- பண்டைய கால இந்திய வரலாறு என்பது சிந்து நாகரிகம் முதல் தென்னிந்திய பேரரசுகள் வரையான வரலாற்றினை கூறுவதாகும். இந்த பண்டைய கால இந்திய வரலாற்றில் கி.மு.3000 லிருந்து கி.பி.971 வரையிலான கிட்டத்தட்ட 4000 ஆண்டு கால வரலாற்றை குறிப்பிடப்படுகிறது. அதாவது சிந்துவெளி நாகரிகம், வேதகால பண்பாடு, புத்த, சமண மத மறுப்பு இயக்கங்கள், மௌரியப் பேரரசு, சங்ககாலத் தமிழ்நாடு, அயலவர்களின் வருகை, குதப்பி பேரரசு, ஹர்ஷப் பேரரசு, தென்னிந்திய பேரரசு பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம்.

இந்த பண்டைய கால இந்திய வரலாறு குறிப்பாக இந்திய பொதுப்பணி தேர்வாணையம் மற்றும் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவு TNPSC & UPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், வரலாற்று மாணவர்கள், வரலாற்று ஆசிரியர்கள், வரலாற்றாளர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவருக்கும் பயன்படும். சரி வாங்க இந்திய பண்டைய கால வரலாற்றை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம்.

பண்டைய கால இந்திய வரலாறு – 11th History Lesson 1 Notes in Tamil

பண்டைய கால இந்திய அறிமுகம்:

இந்தியா ஒரு தொன்மை வாய்ந்த நாகரிகங்களும் பண்பாடுகளும் கொண்ட வளர்ச்சி பெற்ற நாடாகும். பழங்கற்காலம் முதலாக இந்தியாவில் பல குழுக்களைச் சேர்ந்த மக்கள் பலமுறை குடிபெயர்ந்து பல்வகைப்பட்ட சூழல்களுக்கு ஏற்றவாறு தங்கள் பண்பாடுகளைத் தகவமைத்துக் கொண்டனர். இதன் விளைவாகப் பன்மைத் தன்மை கொண்ட நம்பிக்கைகளும் வாழ்க்கை முறைகளும் தொன்றின. உணவு சேகரித்தல் எனும் நிலையிலிருந்து கால்நடை மேய்ச்சல் வாழ்க்கை முறைக்குச் சமூகம் நகர்ந்தது, சிந்து வெளியில் குடியேறிய மக்கள் செம்புக் காலத்தில்பெரும் பக்குவமடைந்து ஒரு முதிர்ச்சியடைந்த வாழ்க்கை நிலையை அடைந்தனர்.

இப்பாடம் கற்காலத்தில் மனிதர்கள் முதன் முதலாகக் குடியமர்ந்ததில் தொடங்கி, சிந்து
நாகரிகத்தின் வீழ்ச்சி வரையிலான இந்திய வரலாற்றின் மீது முழுக் கவனம் செலுத்துகிறது. புதிய கற்காலப் பண்பாட்டையும் விளக்குகிறது.

இந்திய வரலாறு

சான்றுகள்:

இந்திய வரலாற்றில் கற்கால வாழ்க்கை முதல் சிந்து நாகரிகம் வரையிலான நெடுங்காலத்தைப் புரிந்துகொள்ள தொல்லியல் சான்றுகளே பெரிதும் உதவுகின்றன. தொல்லியல் ஆய்விடங்கள், நிலவியல் அடுக்குகள், விலங்குகளின் எலும்புகள், படிமங்கள், கற்கருவிகள், எலும்புக்கருவிகள், பாறை ஓவியங்கள், கைவினைப் பொருள்கள் ஆகியவை இச்சான்றுகளாகும். எழுத்துவடிவச் சான்றுகள் இக்காலத்துக்கு இல்லை. ஹரப்பா மக்கள் ஓர் எழுத்து முறையைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அதன் பொருளை இன்றளவும் அறிய முடியவில்லை.

கற்கால மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும்இடையிலான உறவைப் புரிந்துகொள்ள விலங்கு (fauna), தாவரங்கள் (flora) வடிவிலான சான்றுகள் இன்றிய­மையாதவை. கருகிய விதைகள், மகரந்தங்கள், கல்லாகிப்போன தாவரங்கள் (பைட்டோலித்) ஆகிய தாவரச் சான்றுகள் கற்கால மக்கள் மேற்கொண்ட வேளாண்மை சார்ந்த அறிவைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. வரலாற்றுக் காலத்துக்கு முன்பு நடைபெற்ற மனித இடப்பெயர்ச்சிகள் குறித்து அறிந்துகொள்ள அவர்களுடைய மரபணுக்களும் முக்கியமான சான்றுகளாகும். மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. (மரபணு) ஆய்வுகள் கற்கால மனிதர்களின் இடப்பெயர்ச்சிகள் குறித்த தகவல்களை வழங்குகின்றன. வரலாற்றுக்கு முந்தையகால எலும்பிலிருந்து டி.என்.ஏ-வைப் பிரித்தெடுத்து, மனிதக்கூட்டம் பல்வேறு பகுதிகளுக்குப் பரவியது குறித்துப் புரிந்துகொள்ள அறிவியலாளர்கள் முயற்சி செய்துவருகிறார்கள். மற்றுமொரு முக்கியமான வரலாற்றுச் சான்று மொழி ஆகும். இந்தோ-ஆரிய, திராவிட, ஆஸ்ட்ரோ-ஆசியாட்டிக், திபெத்தோ-பர்மன் ஆகிய மொழிக்குடும்பங்கள் இந்தியாவில் செழித்து வளர்ந்தன. இந்திய வரலாற்றில் நடைபெற்ற மனித இடப்பெயர்ச்சிகளின் பல்வேறு கட்டங்களில் இம்மொழிகள் தோன்றி வளர்ந்தன.

1.1 வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இந்தியா

எழுத்துமுறை தோன்றுவதற்கு முந்தைய காலகட்டம், வரலாற்றுக்கு முந்தைய காலம்
எனப்படுகிறது. இது கற்காலம் எனவும் குறிக்கப்படுகிறது. கற்காலத்தைக் குறித்துப் பேசும்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்க தேசம் ஆகியவை அடங்கிய தென்கிழக்கு ஆசியா முழுவதையும் ஒரே பகுதியாகக் குறிப்பதே பொருந்தும். மனித இனத்தின் மூதாதையர் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி, பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். இவ்வாறு ஆப்பிரிக்காவை விட்டு முதன் முதலாக வெளியே இடம்பெயர்ந்த மனித இனம் ஹோமோ எரக்டஸ் (Homo Erectus) ஆகும். இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரைக்கும், இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலம் 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நிலவியிருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால் அண்மையில் நடைபெற்ற ஆய்வுகளின்படி, வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மனிதர்கள் இந்தியாவில் 10 இலட்சம் முதல் 20 இலட்சம் வரையான ஆண்டுகளுக்கு முன்பே இருந்தார்கள் எனத் தெரிகிறது. பொதுவாக, எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் கற்காலம், வெண்கலக்காலம், இரும்புக்காலம் எனப் பிரிக்கப்படும். அம்மக்கள் பயன்படுத்திய பொருள்கள் (எடுத்துக்காட்டாக, இரும்புக்காலத்தைச் சேர்ந்த ஓவியம் தீட்டப்பட்டசாம்பல் நிற பாண்டங்கள்) அல்லது அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதி (எடுத்துக்காட்டாக, சிந்து), நாகரிகம் நிலவியதாகக் கண்டறியப்பட்ட முதல் இடம் (எடுத்துக்காட்டாக, அச்சூலியன் அல்லது ஹரப்பா) ஆகியவற்றின் அடிப்படையிலேயே அப்பண்பாடுகளுக்குப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. வரலாற்றில் மிகவும் தொன்மையான காலம் பழங்கற்காலம் (Palaeolithic) எனப்படுகிறது. இது மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.

  • கீழ்ப்பழங்கற்காலம் (Lower Palaeolithic)
  • இடைப் பழங்கற்காலம் (Middle Palaeolithic)
  • மேல் பழங்கற்காலம் (Upper Palaeolithic)

பழங்கற்காலத்துக்குப் பிந்தைய காலம் இடைக்கற்காலம் எனப்படும். இடைக்கற்காலத்துக்கு அடுத்த காலகட்டம் புதிய கற்காலம் ஆகும். இக்காலத்தில்தான் விலங்குகளையும் தாவரங்களையும் வளர்க்க மனிதர்கள் கற்றுக்கொண்டார்கள். அது உணவு உற்பத்திக்கு வழிவகுத்தது. பாறைப்படிவியல் (Stratigraphy) ஆய்வுகள், காலவரிசை, கற்கருவிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய பண்பாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கீழ்ப்பழங்கற்காலப் பண்பாடு (Lower Palaeolithic Culture):-

கற்காலத்தின் தொடக்கத்தைச் சேர்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருள்கள் இந்தியத்
துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைத்துள்ளன. கீழ்ப்பழங் கற்கால கட்டத்தின்போது, மனித மூதாதையர்களான ஹோமோ எரக்டஸ் இந்தியாவில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. பழங்கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள் முதன் முதலில், சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்பவரால் 1863இல் கண்டெடுக்கப்பட்டன. தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அவர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டபோது, வரலாற்றுக்கு முந்தைய கால நாகரிகம் நிலவிய பல இடங்களைக் கண்டறிந்தார். அதிலிருந்து கற்கால மனிதர்கள் வாழ்ந்த பல பகுதிகள் இந்தியா முழுவதும் அடையாளம் காணப்பட்டு, அகழாய்வு செய்யப்பட்டன.

கற்கருவிகள்:

வரலாற்றுக்கு முந்தைய காலம் குறித்த ஆய்வுத்துறை பெரும்பாலும் கற்கருவிகளையே சார்ந்துள்ளது. கற்கால மனிதரின் வாழிடங்கள் கல்லாலான கருவிகள் கிடைப்பதை அடிப்படையாகக் கொண்டு அடையாளங் காணப்படுகின்றன. மனித மூதாதையர் கருவிகள் செய்யப் பெரிய கற்பாளங்களையும் கூழாங்கற்களையும் தேர்ந்தெடுத்தனர். அவற்றை மற்றொரு உறுதி வாய்ந்த கல்லால் சீவிக் கருவிகளை உருவாக்கினர். இவ்வாறு கற்களைச் செதுக்கிக் கோடரி, சிறுகோடரி, துண்டாக்கும் கருவி, பிளக்கும் கருவி போன்றவை உருவாக்கப்பட்டன. நன்கு சிந்தித்து உருவாக்கப்பட்ட வடிவமைப்பையும் சீரான தோற்றத்தையும் கொண்ட இக்கருவிகள் கற்கால மனிதர்களின் மேம்பட்ட அறிவாற்றலையும் திறனையும் காட்டுகின்றன. வேட்டையாடுவதற்கும் வேட்டையாடப்பட்ட விலங்குகளின் உடலிலிருந்து தோலை உரிப்பதற்கும் இறைச்சியை வெட்டுவதற்கும் எலும்பின் மஜ்ஜையை பிரித்தெடுப்பதற்கும் எலும்புகளை உடைப்பதற்கும் கிழங்குகளை அகழ்ந்தெடுப்பதற்கும் உணவை பதப்படுத்துவதற்கும் இக்கற்கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

பழங்கற்காலக் கற்கருவிகளின் ஆக்கம், அதற்கான உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அக்காலப்பண்பாடு தொடக்க கால அச்சூலியன், இடைக்கால அச்சூலியன், பிற்கால அச்சூலியன் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பன்முகம் கொண்ட கோளவடிவம் கொண்ட பொருள்கள், கைக்கோடாரி, வெட்டுக்கத்திகள், செதுக்கும் கருவிகள் ஆகியவை தொடக்க கால அச்சூலியன் மரபில் அடங்கும்.

மேற்குத்தொடர்ச்சி மலை, கடற்கரைப் பகுதிகள், வடகிழக்கு இந்தியா ஆகிய இடங்களில் அச்சூலிய மரபுக்கான அடையாளங்கள் காணப்படவில்லை. பெருமழை இதற்குக் காரணமாக இருக்கலாம். பொருத்தமற்ற சூழல், மூலப்பொருள்களின் பற்றாக்குறை ஆகியவை மக்களின் குடியேற்றத்தைத் தடுத்திருக்கலாம். ஒருவேளை வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மக்களுக்கு இப்பகுதிகளில் குடியேற வேண்டிய தேவை இல்லாமல் போயிருக்கலாம். இம்மக்கள் வாழ்ந்த இடங்கள் அதிக எண்ணிக்கையில் மத்திய இந்தியாவிலும் இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியிலும் (சென்னைக்கு அருகில்) கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகள் அதிகளவில் மழையைப் பெறுவதால், பசுமை மாறாமலும் அதிக வளங்களுடனும் உள்ளன.

பரவல்:

பழைய கற்காலத்தின் தொடக்கத்தைச் சேர்ந்த கருவிகள் கங்கைச் சமவெளி, தமிழ்நாட்டின் தென்பகுதி, மேற்குத்தொடர்ச்சி மலையின் குன்றுப்பகுதிகள் ஆகியவற்றைத் தவிர்த்து, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. சென்னைக்கு அருகில் உள்ள அதிரம்பாக்கம், பல்லாவரம், குடியம், கர்நாடகாவின் ஹன்ஸ்கி சமவெளியில் உள்ள இசம்பூர், மத்தியப்பிரதேசத்தில் உள்ள பிம்பெட்கா ஆகியவை அச்சூலிய கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ள வேறு சில இடங்களாகும்.

காலவரிசை:

இந்தியாவில் கீழ்ப் பழங்கற்காலப் பண்பாடு இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கியிருக்க வேண்டுமென அண்மைக்கால ஆய்வுகள் மதிப்பிட்டுள்ளன. இப்பண்பாடு 60,000 ஆண்டுகள் முன்பு வரை தொடர்ந்தது.

11th History Lesson 1 Notes in Tamil

ஹோமினின் மற்றும் விலங்குகளின் புதைபடிவங்கள்:

தற்கால மனிதனுக்கு நெருக்கமான தோற்றத்தைக் கொண்டிருந்த மனித மூதாதையர்
ஹோமினின் (Hominin) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஆப்பிரிக்காவில் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் அவை அரிதாகவே உள்ளன. அதிரம்பாக்கத்தில் ஹோமினின் வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கொள்ளத்தக்க புதைபடிவத்தின் ஒரு பகுதியை இராபர்ட் புரூஸ் ஃபூட் கண்டெடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அந்தப் புதைபடிவம் தற்போது எங்கு இருக்கிறது என்று அறிய முடியவில்லை. இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஹோமினின் புதைபடிவம் மத்தியப்பிரதேசத்திலுள்ள ஹோசங்காபாத் அருகேயுள்ள ஹத்னோராவில் கண்டுபிடிக்கப்பட்டதாகும். அது ஒரு மண்டையோட்டின் மேல்பகுதி. இதை ‘நர்மதை மனிதன்’ என்று தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆர்க்கைக் ஹோமோ சேப்பியன்ஸ் என்னும் மனித இனம் வாழ்ந்ததற்கான அடையாளமாக இது கருதப்படுகிறது. மனித மூதாதையரின் புதைபடிவங்கள் என்ற வகையில் தற்போது இந்தியாவில் இருக்கிற ஒரே புதைபடிவம் இது மட்டுமே.

கற்காலத்தில் மக்கள் வாழ்ந்த பழமைச் சூழலை நாம் புரிந்துகொள்ள விலங்குகளின் புதைபடிவங்கள் பயன்படுகின்றன. நர்மதை சமவெளியில் மிகப்பெரிய தந்தங்களையுடைய வரலாற்றுக்கு முந்தைய காலகட்ட யானை, எலிபஸ் நமடிகஸ் (Elephus namadicus), வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மற்றொரு மிகப் பெரிய யானை வகையான ஸ்டெகோடோன்கனேசா (stegodon ganesa), காட்டுமாடுகள் வகையான போஸ் நமடிகஸ் (Bos namadicus), குதிரை வடிவம் கொண்ட குதிரையான எக்கஸ் நமடிகஸ் (Equus namadicus) ஆகிய விலங்குகளின் புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குதிரை வகை விலங்கு(எக்கஸ்)களின் பற்கள், நீல்காவ் மற்றும் நீர் எருமைக்கான சான்றுகள், சில விலங்குகளின் குளம்புத்தடங்கள் ஆகியவை அதிரம்பாக்கத்தில் காணப்பட்டன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் திறந்த, ஈரப்பதம் வாய்ந்த நிலப்பரப்பு சென்னைக்கு அருகில் இருந்ததை இவை உணர்த்துகின்றன.

வாழ்க்கை முறை:

கீழ்ப்பழங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் விலங்குகளை வேட்டையாடியும் கிழங்குகள், கொட்டைகள், பழங்கள், ஆகியவற்றை சேகரித்தும் வாழ்ந்தனர். வேட்டை விலங்குகளால் வேட்டையாடப்பட்ட விலங்குகளின் இறைச்சியையும் உண்டனர். திறந்த வெளியிலும் ஆற்றுச் சமவெளிகளிலும் குகைகளிலும் வசித்ததை மத்தியப்பிரதேசத்தில் உள்ள பிம்பெட்கா, சென்னைக்கு அருகில் உள்ள குடியம் ஆகிய இடங்களில் உள்ள சான்றுகளால் அறிந்துகொள்ளலாம். ஹோமோ எரக்டஸ் இனத்தைச் சேர்ந்தமனிதர்கள் தற்கால மனிதர்களான ஹோமோ சேப்பியன்ஸைப் போல மேம்பட்ட மொழியைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சில ஒலிகள் அல்லது சொற்கள் மூலம் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கலாம். சைகைகளைச் சார்ந்த மொழியையும் பயன்படுத்தியிருக்கலாம். கருவிகளைச் செய்வதற்குச் சரியான கல்லைத் தேர்வு செய்வதற்கான அறிவு அவர்களுக்கு இருந்தது. பாறைகளைச் செதுக்கவும் அவற்றைக் கருவிகளாக வடிவமைக்கவும் சுத்தியல் போன்ற கற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இடைப் பழங்கற்காலம் (Middle Palaeolithic Culture):

இன்றிலிருந்து 4,00,000 ஆண்டுகளுக்கு முன்பான காலப்பகுதியில் கற்கள் தொடர்பான தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. மனித மூதாதையர்களிடத்தும் பிரிவுகள் தோன்றின. இக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் ஹோமோ எரக்டஸ் வகையினர் ஆவர். மனிதர்கள் தற்போது கொண்டுள்ள உடலமைப்புக்கூறுகளுடன் ஏறத்தாழ மூன்று இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இடைப்பழங் கற்காலக்கட்டத்தை நெவாசா என்னுமிடத்தில் பிரவாரா ஆற்றங்கரையில் ஹெச். டி.சங்கலியா என்ற தொல்லியலாளர் முதலில் அடையாளம் கண்டார். இதையடுத்து, இடைப்பழங் கற்காலம் நிலவிய பல இடங்களும் அடையாளம் காணப்பட்டன. இக்காலகட்ட மனிதர்கள் வாழ்ந்ததாக அறியப்படும் அதிரம்பாக்கத்தின் காலம் இன்றிலிருந்து 3,85,000-1,72000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது என அண்மையில் கணிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் நிலவிய இடைப் பழங்கற்காலப் பண்பாட்டைப் போலவே இந்தியாவின் இடைபழங் கற்காலக்கட்டமும் பழமை வாய்ந்ததாக இருக்கலாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil